30/03/2013

பெர்க்காசா உதவித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை இந்து சங்கம் கண்டிக்கிறது
zulஇந்து சமயத்தை இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்  சுல்கிப்லி நூர்டின் தொடர்ந்து கண்டிக்கப்பட்டு வருகிறார்.
அவருக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புகார் செய்யப்பட்டுள்ள போதிலும் அதிகாரிகள் ஏன்
இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என மலேசிய இந்து சங்கம் வினவியது.
தற்போது இணையத்தில் வலம் வரும் அந்த வீடியோ 2011ம் ஆண்டு சேர்க்கப்பட்டதாகும். இந்து சங்கம் அப்போதே புகார் செய்தது என அதன் தலைவர் ஆர்எஸ் மோகன் ஷான் கூறினார். என்றாலும் சுல்கிப்லிக்கு எதிராக இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.
வலச்சாரி மலாய் போராட்ட அமைப்பான பெர்க்காசாவின் உதவித் தலைவராகவும் எம்பி -யாகவும் இருப்பதால்  நடவடிக்கை எடுக்கப்படவில்லையா என அவர் மேலும் வினவினார்.
‘இனவாதியாகவும் சமய வெறியராகவும் இருப்பதற்காக சுல்கிப்லியை மலேசிய இந்து சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. 1948 தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அது கேட்டுக் கொள்கின்றது.”
“பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தீய நோக்கம் கொண்ட அவரது அறிக்கைகள் இந்து சமூகத்தில் கவலையை
ஏற்படுத்தியுள்ளது.அதனைத் தடுக்காவிட்டால் இந்த நாட்டில் பல்வேறு இனங்களுக்கும் சமயங்களுக்கும் இடையில் நிலவும் இணக்கமான உறவுகள் பாதிக்கப்படும்,” என மோகன் நேற்று கூறினார்.
இதனிடையே புலனாய்வைத் தொடங்கும் பொருட்டு சுல்கிப்லிக்கு எதிராக தாம் டாங் வாங்கி போலீஸ்
நிலையத்தில் புகார் செய்துள்ளதாக நியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர் தஸ்லீம் முகமட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.zul2
சுல்கிப்லியின் அறிக்கைகள் உணர்வுகளைத் தூண்டுவதாக குறிப்பிட்ட அவர், அந்த வீடியோ “அவமானப்படுத்துகிறது, தேச நிந்தனையானது என்றார்.
“மற்ற சமயங்களயும் இனங்களையும் அவமானப்படுத்துவதை இஸ்லாம் தடுக்கின்றது. அதனால் முஸ்லிம் என்ற  முறையில் சுல்கிப்லியின் அறிக்கைகளைக் கண்டு நான் வெட்கப்படுகிறேன்.”
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஐக்கியம் சீர்குலைவதற்கு வழி வகுத்ததற்காக இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவதற்கு வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 298 ஏ பிரிவின்  கீழ் சுல்கிப்லி விசாரிக்கப்பட வேண்டும் எனப் பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப தஸ்லீம் அறிக்கை அமைந்துள்ளது.
“சுல்கிப்லி சொன்ன வார்த்தைகள் இந்த நாட்டில் உள்ள பெரிய சமயம் ஒன்றின் மீது தொடுக்கப்பட்டுள்ள
மோசமான தாக்குதல்” என்றும் சுரேந்திரன் வருணித்தார்.
zul1ஐந்து நிமிட வீடியோ
அந்த வீடியோவில் சுல்கிப்லி , இந்து தெய்வச் சிலைகளை விற்பனை செய்யும் ஒரு கடைக்காரருடன் அவருடைய கடைக்குள் வெள்ளம் புகுந்த சம்பவத்துக்குப் பின்னர் பேசியதாகக் குறிப்பிட்டார்.
வெள்ளத்தால் கடையும் அதிலிருந்த சிலைகளும் பாதிக்கப்பட்டதாக கடைக்காரர் தெரிவித்ததாக அவர்  கூறினார்.
“தெய்வங்களின் உருவச் சிலைகளும்கூடவா பாதிக்கப்பட்டன? எப்படி? அவை தெய்வங்கள் ஆயிற்றே? கடைக்கு முன்னால் அவற்றை வரிசையாக வைத்து வெள்ளம் கடைக்குள் வராமல் தடுத்து அதை இந்திய முஸ்லிம்களின் கடை பக்கமாக திருப்பி விட்டிருக்கலாமே, ஏன் அதைச் செய்யவில்லை?
“கடவுள் நம்மைப் பாதுகாப்பார் என்கிறபோது அதை ஏன் செய்யவில்லை? அவற்றால் வெள்ளத்தைக்கூட
தடுத்து நிறுத்த முடியவில்லையே. அதற்கு அந்தக் கடைக்காரர் ‘அது எப்படி முடியும். அது வெறும்
கல்தானே’என்றார்”.இவ்வாறு சுல்கிப்லி பேசி இருந்தார்.
அந்த வீடியோ, ‘Chandra Lawan Tetap Lawan’ என்ற தலைப்பைக்கொண்ட பக்காத்தான் -ஆதரவு
யு-டியூப்பிலும் முகநூலிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.
ஆனால், அந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பதோ, சுல்கிப்லியின் பேச்சு திரித்து
வெளியிடப்பட்டதா என்பதோ தெரியவில்லை.
சுல்கிப்லியின் கருத்துக்களைப் பெறுவதற்கு மலேசியாகினி அவருடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. ஆனால் இது வரை பதில் கிடைக்கவில்லை.
சுல்கிப்லி, முன்பு பிகேஆர் உறுப்பினராக இருந்தவர். ‘இறைவன்’ என்பதை ‘அல்லாஹ்’ என்று மலாயில்
மொழிபெயர்ப்பது தொடர்பில் கட்சி கொண்ட நிலைபாட்டுடன் ஒத்துப்போக முடியாததால் அவர்  கட்சியிலிருந்து  நீக்கப்பட்டார்.
அரசாங்கத்தை இழிவுபடுத்தியதாக கூறப்பட்ட பின்னர் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் பத்து எம்பி தியான் சுவா மீது உடனடியாகக் குற்றம் சாட்டப்பட்ட வேளையில் சுல்கிப்லி மீது எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படாதது குறித்து பக்காத்தான் தலைவர்களும் மிகுந்த ஆத்திரம்டைந்துள்ளனர்.

No comments:

Post a Comment